# 802 to #804

#802. நிலா மண்டலம் பாலிக்கும்

ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்றுஊறிடும்
வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து
நீந்துஉரை செய்யில் நிலாமண்டலம் ஆய்
பாய்ந்து உரை செய்தது பாலிக்குமாறே.

மறைகளை ஆராய்ந்து சொல்லப் போனால், சுழுமுனைத் தியானச் சாதனையில் அமுதம் ஊறிப் பெருகும் . அது அப்போது ஓர் ஒலியை எழுப்பும். ஒலிக்கும் போது சந்திர மண்டலமாக விளங்கி அது நம்மைப் பாதுகாக்கும்.

#803. நூறு கோடி ஆண்டுகள்

நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.

நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவத் தொனி கேட்கும். சீவனும், சிவனும் அங்கே தோன்றுவர். மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே தோன்றுவர். நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இராது.

முப்பத்து மூவர்:
துவாதச ஆதித்தர் = 12.
ஏகாதச ருத்திரர் = 11
அஷ்ட வசுக்கள் = 8
அஸ்வினி குமாரர் = 2

#804. அமுதம் உண்ணலாம்

ஊன் ஊறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வான் ஊறல் பாயும் வகைஅறி வார் இல்லை;
வான் ஊறல் பாயும் வகை அறிவாளர்க்குத்
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே.

ஊனால் ஆன உடம்பால் அறியும் அறிவு எல்லாம் ஒருவரின் சிரசில் பொருந்தி அமையும். அந்த சிரசின் உச்சியின் மேல் வான் மண்டலம் பொருந்தி அமையும். ஆயினும் இதன் இயல்பை அறிந்தவர் இல்லை. வான்மண்டலத்தைப் பொருந்தி அறிந்து கொண்டவர் அங்கு ஊறும் தேனை ஒத்த இனிய அமுதத்தை உண்டு தெளிவு பெறலாம்.